வீரஅழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
மானாமதுரை வீரஅழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
மானாமதுரை
மானாமதுரை வீரஅழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஆடி பிரம்மோற்சவ விழா
மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற வீரஅழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு 11 வகையான திரவிய பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அர்ச்சகர் கோபி தலைமையிலான அர்ச்சகர்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் சவுந்தரவல்லி தாயாருக்கு காப்பு கட்டப்பட்டது. செட்டிகுளம் பகுதியில் கவுன்சிலர் லதாமணி, ராஜேந்திரன், முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் சுவாமிகள் எழுந்தருளினர்.
தேரோட்டம்
இதில் செட்டிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வாக 29-ந் தேதி இரவு திருக்கல்யாணம், ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
2-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 4-ந் தேதி உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் கோவில் தேவஸ்தான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.