மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த சிவகிரி விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு டாக்டர்கள் மரியாதை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராயகிரி பகுதியை சேர்ந்தவர் சண்முகதுரை (வயது 52), விவசாயி. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், சண்முகதுரைக்கு ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டு, மூளையில் ரத்தம் கசிந்தது தெரியவந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார்.
இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக பெற ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து டீன் ரேவதி பாலன் மேற்பார்வையில் டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சண்முகதுரையின் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண் விழிகள் ஆகியவற்றை தானமாக பெற்றனர்.
நுரையீரல் சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும், கணையம் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கும் விமானம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் ஒரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண் விழிகள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தேவைப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு நுரையீரலை விமானம் மூலம் அனுப்பி வைப்பதற்காக ஆம்புலன்சில் தூத்துக்குடிக்கு எடுத்து சென்றபோது, ஆம்புலன்ஸ் எளிதாக செல்வதற்கு வசதியாக போலீசார் போக்குவரத்தை சரிசெய்து கொடுத்தனர்.
இதற்கிடையே, கலெக்டர் கார்த்திகேயன், சண்முகதுரை குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளித்ததற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். மேலும் உடல் உறுப்புகள் தானம் செய்த சண்முகதுரையின் உடலுக்கு டாக்டர்கள் குழுவினர் இறுதி மரியாதை செலுத்தி, சொந்த ஊருக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுப்பி வைத்தனர்.