நாகலூர் ஏரி மதகில் உடைப்பு: தண்ணீர் தேக்க முடியாததால் விவசாயிகள் கவலை
நாகலூர் ஏரி மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் உள்ள 3 மதகுகளில் இருந்து பாசன வாய்க்கால்கள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் 600 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்தநிலையில் ஏரி கரைகளில் உள்ள ஒரு மதகில் உள்ள இரும்பு ஷட்டர் துருப்பிடித்து அடிப்பகுதியில் உடைந்து போய்விட்டது. இதனால் மழை காலங்களில் ஏரிக்கு வரும் தண்ணீரை தேக்கிவைக்க முடிவதில்லை. தண்ணீர் அனைத்தும் இந்த ஓட்டையின் வழியாக வெளியேறி அருகே உள்ள வயல்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் ஏரி நீரை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்களுக்கு போதிய தண்ணீரை பாய்ச்ச முடியாமல் பரிதவித்து வரும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நாகலூர் பகுதி விவசாயிகள் சேதமடைந்து கிடக்கும் மதகை சீரமைப்பதுடன், நீர்வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி மழை காலங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீர்மட்டம் குறைந்தது
இதுகுறித்து நாகலூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நாங்கள் சம்பா சாகுபடி செய்வோம். அதன்படி நடப்பாண்டு இப்பகுதி விளை நிலங்களில் நெல் நடவு செய்து பயிா்களை பராமரித்து வந்தோம். ஏரியில் உள்ள உடைந்த மதகு வழியாக தண்ணீர் வெளியேறி விட்டதால் ஏரியில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால், சுற்றியுள்ள கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. ஏரி, கிணறு நீரை நம்பி சாகுபடி செய்த என்னை போன்ற விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற என்ன செய்வது என புலம்பி வருகிறார்கள்.
மேலும் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால்களும் ஆங்காங்கே சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஏரிக்கு தண்ணீர் செல்வது தடை பட்டுள்ளது.
எனவே உடைந்த மதகை சீரமைப்பதுடன், அந்த பகுதியில் கரையை பலப்படுத்திட வேண்டும். அதேபோன்று நீர் வரத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே இதை மாவட்ட கலெக்டர் கவனத்தில் கொண்டு, எதிர்வரும் பருவமழை காலத்திற்குள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.