பூட்டை உடைத்து ஜவுளிக்கடையில் பணம் கொள்ளை
சிதம்பரத்தில் ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.cu
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் மேல சாவடி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் மகன் சாகுல் ஹமீது(வயது 37). இவர் சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் ஜவுளிக்கடை மற்றும் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் சாகுல் ஹமீது தனது 2 கடைகளையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடைகளை திறக்க வந்தபோது, ஜவுளிக் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை காணவில்லை. மேலும் கடையில் இருந்த 5 உள்ளாடைகளையும் காணவில்லை. அவற்றை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள செருப்பு கடையிலும் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடையில் பொருட்களோ பணமோ திருடு போகவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் நேற்று மதியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தில்லை காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடையில் பணம் மற்றும் உள்ளாடைகளை திருடியவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனை செய்தவற்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அப்போது அவருக்கு மருத்துவமனை பரிசோதனை செய்தபோது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவரை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை கண்காணிப்பில் வைக்குமாறு அவருடைய தாயாரிடம் போலீசார் ஒப்படைத்துவிட்டு சென்றனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் 3 உள்ளாடைகளை போலீசார் மீட்டனர்.