கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு
பழனி அருகே கோவிலில் பூட்டை உடைத்து மின்சாதன பொருட்களை திருடு போனது.
பழனி அருகே பாப்பம்பட்டியில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி கண்ணன் நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவில் நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது, ேகாவில் வளாகத்தில் இருந்த மின்சாதன பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கோவில் கருவறை கதவை திறக்க முயன்றனர். அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள பீரோவையும் திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவற்றை திறக்க முடியாததால் மின்சாதன பொருட்களை மட்டும் திருடிவிட்டு மர்மநபர்கள் தப்பிஓடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.