2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஆண்டிமடம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அம்மன் கோவில்கள்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மேலநெடுவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளன. இந்த கோவில்களின் பூசாரி கொளஞ்சி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை கோவில்களை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது 2 கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னே உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகைகள் மற்றும் உண்டியல்களில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆண்டிமடம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் அரங்கேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.