வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகை-ரூ. 40ஆயிரம் திருட்டு
முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகை-ரூ. 40ஆயிரம் திருட்டு போனது
முசிறி, ஜூன்.22-
முசிறி அருகே உள்ள வெள்ளூரை அடுத்த ஐவேலி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவரது மகன் ஆனந்தபாபு (வயது 28). நேற்று காலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொட்டியத்தில் உள்ள துக்க வீட்டுக்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் பீரோவில் இருந்த 10½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.40ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் லீலி சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஆனந்த பாபுக்கு கடந்த 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, உறவினர்களால் வழங்கப்பட்ட பணம்-நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.