வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை
x

மதுரை திருநகரில் பலசரக்கு கடைக்காரரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

மதுரை திருநகரில் பலசரக்கு கடைக்காரரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பலசரக்கு கடைக்காரரின் வீடு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் விஸ்தரிப்பு பகுதியான லயன் சிட்டி பிரணவ் தெருவில் வசித்து வருபவர் பொன்ராஜ்(வயது 63). இவரது மனைவி ராமலட்சுமி(50). இவர்கள் திருநகர் 3-வது பஸ் நிறுத்தத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்கள். பொன்ராஜ், ராமலட்சுமி ஆகிய இருவரும் வழக்கம்போல நேற்று முன்தினம் காலையில் கடைக்கு சென்று விட்டனர்.

இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு அங்கு இருந்த பீரோவை திறந்து 60 பவுன் நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்தநிலையில் பொன்ராஜ், ராமலட்சுமி ஆகிய இருவரும் கடையை அடைத்துவிட்டு வழக்கம்போல இரவு 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தடயங்கள் சிக்கியது

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை காணவில்லை. அது திருட்டு போய் இருந்தது. அதோடு வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் சில ஆவணங்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை பதிவு செய்தனர்.

இதற்கிடையே அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த பகுதியில் உள்ள நிலையூர் கண்மாய் வழியாக ஓடி கூத்தியார்குண்டு பஸ் நிறுத்தத்தில் நின்று விட்டது. இதனையொட்டி கொள்ளையர்கள் பஸ் ஏறி சென்று விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story