ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு


தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:38+05:30)

தூத்துக்குடியில் ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பொருட்கள் திருடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்டுடியோ

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேஷ் (வயது 43). இவர் எட்டயபுரம் ரோடு மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். நேற்று காலையில் வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், கடையின் உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள கேமிரா, பிளாஷ், பேட்டரி சார்ஜர், லென்ஸ் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு திருட்டு

இதே போன்று முத்தையாபுரத்திலுள்ள ஒரு ஸ்டுடியோவில் மர்மநபர் கேமிராவை திருடி சென்ற சம்பவமும் நடந்து உள்ளது.


Next Story