கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருப்பனந்தாள் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பனந்தாள்;
திருப்பனந்தாள் அருகே திட்டச்சேரி கிராமத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றனா். அப்போது கோவிலில் இருந்த எவர்சில்வர் உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கோவில் பின்புறம் எவர்சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி செல்வம் கொடுத்த புகாரின் போில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைப்போல பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை திருட முயற்சி நடந்துள்ளது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் கோவில் அருகே சென்றதால் உண்டியலை திருட வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.