அத்திக்கடவு பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு
சரவணம்பட்டியில் சாலை விரிவாக்க பணியின் போது அத்திக் கடவு பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப் பட்டது.
சரவணம்பட்டி
சரவணம்பட்டியில் சாலை விரிவாக்க பணியின் போது அத்திக் கடவு பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப் பட்டது.
குடிநீர் குழாயில் உடைப்பு
கோவை -சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சத்தி ரோடு சரவணம்பட்டி ஆனந்தகுமார் மில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் வெட்டப்பட்ட மரங்களின் வேர்களை அகற்றும் பணி நடை பெற்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த அத்திக்கடவு பிரதான குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் வெளியேறி வீணாகியது.
பொறுப்பேற்க முடியாது
இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிவா என்ற பழனிச்சாமி, பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், குடிநீர் குழாய் உடைந்தது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில், நெடுஞ்சாலை துறையினர் எங்களிடம் அனுமதி பெறாமலும், முன்னறிவிப்பும் இன்றியும் பணிகளை செய்து குடிநீர் குழாயை உடைத்து உள்ளனர். எனவே அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று விட்டனர்.
அதிகாரிகள் அலட்சியம்
நெடுஞ்சாலை துறையினரின் தரப்பில், 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டி தான் குடிநீர் குழாயை பதிக்க வேண்டும். ஆனால் குடிநீர் வடிகால் வாரியத்தினர் 2 அடி ஆழத்திலேயே குழி தோண்டி குழாய் பதித்து உள்ளனர்.
அதன் காரணமாகவே குழாய் உடைந்து உள்ளது. எனவே அவர்கள தான் சரி செய்ய வேண்டும் என்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு உடைப்பு ஏற்பட்ட குழாயை மாலை 5 மணி வரையிலும் சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் முன் வர வில்லை.
அவர்களின் அலட்சியத்தால் சரவணம்பட்டி, சிவானந்தபுரம், விநாயகபுரம், சின்னவேடம்பட்டி, எல்.ஜி.பி.நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
மக்களுக்கு அத்தியாவசியமான குடிநீர் வினியோகத்தில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.