கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு


கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 22 Sept 2023 7:30 AM IST (Updated: 22 Sept 2023 12:01 PM IST)
t-max-icont-min-icon

வைத்தீஸ்வரன் கோவிலில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

வைத்தீஸ்வரன் கோவிலில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

கூட்டு குடிநீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரை கிராமங்களான பூம்புகார், வானகிரி, மங்கைமடம், பெருந்தோட்டம், கீழமூர்க்கரை, நாங்கூர், கீழச்சக்கநாதபுரம், தென்னாம்பட்டினம், மேலையூர், திருநகரி, நெப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் - மணல்மேடு சாலை ரெயில்வே சாலையில் உள்ள கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாககுடிநீர் வீணாக சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடைப்பு நாளுக்கு நாள் பெரிதாகி காலை, மாலை இரு வேளைகளிலும் ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை

இந்த குடிநீர் குழாய் உடைப்பால் கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன் கூறுகையில், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி உள்ளிட்ட சாமிகளை வழிபட ஏராளமானோர் தினமும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் அருகில் உள்ள ரெயில்வே சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது.

இந்த குடிநீர் குழாய் உடைப்பால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். இல்லை என்றால் வர்த்தக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் செய்யப்படும் என்றார்.


Next Story