ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு:பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு:பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sep 2023 7:45 PM GMT (Updated: 28 Sep 2023 7:46 PM GMT)

ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. இதனால் குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. இதனால் குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஓடையகுளம், கோட்டூர் மற்றும் வேட்டைக்காரன்புதூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2002-ம் ஆண்டு பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கிராமங்கள் தோறும் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளை ஒப்பந்ததாரர்களே மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, அங்கிருந்து வீடுகள் தோறும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

முறையாக பராமரிக்கவில்லை

இந்த நிலையில் பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளை குடிநீர் வடிகால் வாரியத்தினர் முறையாக பாராமரிக்காததால் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் தற்போது 3 இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. குறிப்பாக காளியாபுரம் பகுதியில் குடிநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- போதிய அளவு பருவ மழை பொழியாத காலகட்டத்தில் காளியபுரம் முதல் எட்டித்துறை வரை மட்டும் குடிநீர் கொண்டு செல்ல கூடிய குழாய்கள் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 5 மாதங்களாக பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

இதனால் கடைகோடியில் உள்ள கிராமங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் உடைந்த குழாய்களை சீரமைக்க கோரி பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைப்பதோடு ெபாதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story