50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்


50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
x

நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தொடங்கப்பட இருப்பதாக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்.

நாமக்கல்

காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும், சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான காலை உணவு வழங்கப்படும் என சட்டபேரவையில் 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மதுரையில் தொடங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலும் இத்திட்டம் அன்று 50 அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது.

2,856 மாணவ, மாணவிகள்

இது குறித்து கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நகராட்சிகள், மலை பகுதிகளில் முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ளது என்று அறிவித்து உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாளை மறுநாள் நாமக்கல் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி மற்றும் மலைப்பகுதியான கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 50 தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 2,856 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். பின்னர் அரசு ஆணைக்கேற்ப பிற பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டமானது ஏழை, எளிய பெற்றோரின் பிள்ளைகள் காலையில் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்ற முதல்-அமைச்சரின் சீரிய எண்ணத்தின் காரணமாக தொடங்கப்பட உள்ளது. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதியில் 41 பள்ளிகளில் பயிலும் மழைவாழ் மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் விரும்பி உண்ணும் வகையில் 13 வகையான வெவ்வேறு உணவு வகைகள் சமைத்து வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story