1 முதல் 5-வது வரை படிக்கும் 1,500 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்


1 முதல் 5-வது வரை படிக்கும் 1,500 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
x

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,500 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,500 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

ஊட்டச்சத்து மாத விழா

சிவகங்கை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரமேஸ்வரி வரவேற்றார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் இளைய தலைமுறை உள்பட அனைவரையும் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை சிற்றுண்டி

நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சி, சத்தான உணவு எடுத்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 1,552 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட மொத்தம் 54,797 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இம்மையங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகளுக்கு அரசின் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில், நகர்ப்புற, ஊரக பகுதிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 1,500 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு

இந்நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு முதல் 1,000 நாட்களுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து குறித்த தகவல் பலகையினை துணை சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்த செவிலியர்களுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும் ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோருக்கு பரிசுகளையும் வழங்கினார்.

முன்னதாக கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் சத்துணவு குறித்த, கண்காட்சியினை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ., சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, சிவகங்கை நகர மன்ற தலைவர் துரைஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமுதா நன்றி கூறினார்.



Next Story