732 பள்ளிகளில் காலை உணவு திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 2-வது கட்டமாக நாளை முதல் 732 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
கண்காணிப்புகுழு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் விரிவுபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் உமா பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 16.9.2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
விரிவாக்கம்
தற்போது, முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 27,128 மாணவ, மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,467 மாணவ, மாணவிகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் பயன் பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொருட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிரியா, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செல்வகுமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






