995 அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
கோவை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 995 பள்ளிகளில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 995 பள்ளிகளில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கோவை மாவட்டத் தில் 62 மாநகராட்சி பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 3 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 9 பள்ளிகள் என மொத்தம் 74 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 9.171 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
62,209 மாணவ-மாணவிகள் பயன்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் 2-ம் கட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் 121 பள்ளிகளில் பயிலும் 15,149 பேர், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகளில் பயிலும் 1462 பேர், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகளில் 1,060 பேர் என மொத்தம் 136 பள்ளிகளில் 17,671 மாணவ- மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி கூடலூர் நகராட்சி, காரமடை நகராட்சி, கருமத்தம் பட்டி நகராட்சி, பொள்ளாச்சி நகராட்சி, வால்பாறை நகராட்சி ஆகிய நகராட்சி பகுதிகளில் உள்ள 108 அரசு தொடக்கப் பள்ளி களில் 4,263 மாணவ- மாணவிகளும், காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சர்கார்சாமக் குளம், அன்னூர், சூலூர், தொண்டா முத்தூர், மதுக்கரை, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு), ஆனைமலை ஆகிய நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 751 அரசு தொடக்கப் பள்ளிகளில் 40,275 மாணவ-மாணவிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அந்தந்த பள்ளிகளில் உள்ள சமையற்கூடங்களில் காலை உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக மொத்தம் 995 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 62,209 மாணவ - மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.
மலைவாழ் பகுதி
வால்பாறை பகுதியில் 51 பள்ளிகள் இயங்கி வருகிறது. சிறப்பு ஏற்பாடாக, அப்பகுதிகளில் 4 இடங்களில் சமையற்கூடங்களில் காலை உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. இதில் 15 பள்ளிகள் மலைவாழ் பகுதியில் உள்ளதால், அந்தந்த பள்ளிகளிலேயே காலை உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பள்ளிகல்வித்துறை, மகளிர் திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகிய துறைகளின் மண்டல அலுவலர்கள் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர் பாட்சா, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.