தமிழகத்தில் விரைவில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்


தமிழகத்தில் விரைவில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்
x

தமிழகத்தில் விரைவில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர்

அரசு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள ரூ.2,400 கோடி நிதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் ரூ.784 கோடி மதிப்பீட்டில் 5,351 புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டத்தில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கணியம்பாடி, பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ரூ.15 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் 114 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கும் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாழடைந்து இருக்கக்கூடிய பள்ளிக்கட்டிடங்களை, பழுதாகி போயிருக்கக்கூடிய வகுப்பறைகளை சீர்செய்திட வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தோடு இந்த திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, இன்றைக்கு மட்டும் ரூ.784 கோடி மதிப்பீட்டில் 5,351 புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டக்கூடிய அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை இங்கு உங்கள் முன்னாலே நாம் நிறைவேற்றி காட்டி இருக்கிறோம்.

கல்வி, மருத்துவம் 2 கண்கள்

நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்ற நேரத்தில் தவறாமல் ஒன்றை குறிப்பிட்டு சொல்வதுண்டு. நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் கல்வியை, மருத்துவத்தை 2 கண்களாக பாவித்து அதற்காக நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று பலமுறை நான் எடுத்துச் சொன்னதுண்டு. அந்த வகையில்தான், இன்றைக்கு இந்த திட்டம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கப்பட்டு இருக்கிறது.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு நம்முடைய ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்னால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்ற நேரத்தில், அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் திடீர் திடீரென்று ஆய்வுக்கு நான் செல்வது உண்டு. அவ்வாறு பல பள்ளிகளுக்கு சென்றபோது, அந்த பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கக்கூடிய மாணவர்கள், மாணவிகள் எல்லாம் என்னிடத்திலே சொல்வதுண்டு, நாங்கள் காலையில் கூட உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்துவிடுகிறோம் என்று உருக்கத்தோடு சொன்னார்கள்.

காலை உணவு திட்டம்

அதை கேட்டுவிட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு பின்னால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எல்லாம் அழைத்து, அதற்கு பிறகு ஆய்வு நடத்தி அதைத் தொடர்ந்துதான், எப்படி மதிய உணவு திட்டத்தை நாம் அரசின் சார்பில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோமோ, அதேபோல் காலை உணவு திட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்து, அந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. விரைவில் முழுமையாக அதுவும் நிறைவேற்றப்பட இருக்கிறது.

அதேபோலத்தான் பல பள்ளிக்கட்டிடங்கள் இடிந்த நிலையில், வகுப்பறைகள் இல்லாத வகையில் மரத்தடி நிழல்களில் உட்கார வைத்து அதில் வகுப்புகள் நடத்தக்கூடிய அந்த காட்சிகளையும் நாங்கள் கண்கூடாக பார்த்தோம். இதையெல்லாம் உடனடியாக சீர் செய்ய வேண்டும், அந்த மாணவர்கள் வசதியாக நல்லவித அடிப்படை வசதிகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் படிக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களுடைய சிந்தனைகள் அந்த கல்வியை போய் சேர முடியும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து, அதற்கு பிறகு பேராசிரியர் அன்பழகன் பெயரிலே இந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்து இருக்கிறோம். அதற்காக ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்து அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அந்த பணியை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.

பள்ளிகள் மேம்படும்

எனவே, இதன் மூலமாக பல பள்ளிகள் பாழடைந்து இருக்கக்கூடிய, சீரழிந்து இருக்கக்கூடிய அந்த பள்ளிகள் எல்லாம் இன்றைக்கு மேம்படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். இதை நல்ல வகையில், அந்தந்த பகுதியிலே இருக்கக்கூடிய அந்தந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆர்.காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் தாரேஸ் அகமது, பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், வேலூர் மாவட்ட கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார்,கார்த்திகேயன், அமலுவிஜயன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

காணொலி காட்சி

காணொலி காட்சி வாயிலாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திண்டுக்கல், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பூர், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள், கரூர், மதுரை, கிருஷ்ணகிரி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், கரூர், மதுரை, கிருஷ்ணகிரி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story