17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை கருணாநிதி பிறந்த திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள்.
தஞ்சாவூர்,
தமிழக சட்டசபையில் கடந்த 7.5.22 அன்று 110-ம் விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு பள்ளிக் குழந்தை களுக்கு காலையில் உணவு அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
மதுரையில் தொடக்கம்
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அண்ணாவின் 115-வது பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று மதுரை சிம்மக்கல் ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி நடந்த சுதந்திரதின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு 25-ந் தேதி (அதாவது நேற்று) முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
இந்த திட்டம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பயின்ற நாகை மாவட்டம் திருக்குவளை அரசு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைக்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
தொடங்கி வைத்தார்
அந்த வகையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை உணவு பரிமாறி இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
'வாழ்விலோர் பொன்னாள்' என்று சொல்கின்ற வகையில், இந்த நாள் சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழின தலைவர் கலைஞர் படித்த தொடக்கப்பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மனநிறைவை தருகிறது
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், இந்த காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது.
இன்னும் சொல்லவேண்டும் என்றால் படிப்புக்காகவும், வேலைக்காகவும் பஸ்சில் செல்லும் நம்முடைய சகோதரிகள், கட்டணமில்லாமல் 'விடியல் பயணத்தை' மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகள் 'புதுமைப் பெண்' திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும் போதும், அவர்களை விட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். ஏனென்றால், பலருடைய மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்கிறேன் என்ற அந்த உணர்வில் அப்படி பெருமகிழ்ச்சி உண்டாகும்.
அடுத்த மாதம் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரியும். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அன்றைக்கு குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' தொடங்க போகிறோம். அது என்னுடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்க போகின்றது. இப்படி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்ற திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களில் முக்கியமான ஒன்றுதான் இந்த காலை உணவு திட்டம்.
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று மணிமேகலை காப்பியம் சொன்னபடி உயிர் கொடுக்குற அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக்கொண்டு வருகிறது.
மதிய உணவு
கல்வி பெற வறுமை, சாதி என்று எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கருணாநிதியும் நினைத்தார்கள்.
அவர்களுடைய வழித்தடத்தில் நடக்கின்ற நான், அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றுகின்ற இடத்திற்கு வந்து அதையெல்லாம் இப்போது செயல்படுத்துகிறேன். தொடர்ந்து செயல்படுத்துவேன். இதற்கான தொடக்கம், திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியினுடைய தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர் தான்.
சென்னை மாநகராட்சியினுடைய தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு 1922-ம் ஆண்டு மதிய உணவை வழங்கினார். இந்தியா விடுதலை அடைகின்ற சில மாதங்களுக்கு முன்னால், நிதி நெருக்கடியை காரணம் காட்டி மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்டது.
1955-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பொதுக்கல்வி இயக்குனராக இருந்த சுந்தரவடிவேலு தான் இதற்கான முழு முயற்சியையும் எடுத்தவர். சில அதிகாரிகளுடைய கடுமையான எதிர்ப்பையும் மீறி அதை செயல்படுத்திக்காட்டியவர். யார் என்று கேட்டீர்கள் என்றால், பெரியாரின் பெருந்தொண்டராக இருந்த சுந்தரவடிவேலு.
ஊட்டச்சத்து திட்டம்
இப்படிப்பட்ட மதிய உணவு திட்டத்தை தி.மு.க. அரசு தொடர்ந்து நடத்தியது. இதை செழுமைப்படுத்துகின்ற வகையில் கூடுதலாக ஊட்டச்சத்து திட்டத்தை 1971-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கருணாநிதி கையில் எடுத்தார்.
குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து வழங்குகின்ற மாபெரும் இயக்கமாக முதல்-அமைச்சர் கருணாநிதி அதை செயல்படுத்தினார். அந்த காலத்தில் 'பேபி ரொட்டி' என்ற ஒன்று உண்டு. அந்த பேபி ரொட்டியை எல்லா குழந்தைகளுக்கும் வழங்கியது கருணாநிதி தலைமையில் இருந்த அரசு.
1975-ம் ஆண்டு முழுமையாக மாநில அரசினுடைய நிதியில் 'ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை' முதல்-அமைச்சர் கருணாநிதி மாநிலம் முழுவதும் நடத்திக்காட்டினார். இதை மேலும் விரிவுபடுத்தியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதிகப்படியான மையங்களை உருவாக்கி, சத்துணவு திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தவர், யார் என்று கேட்டால், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மீண்டும் 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி சத்தான முட்டையை வழங்கினார்.
கொண்டைக்கடலை
அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, வாரம் ஐந்து நாட்களும் முட்டை வழங்கினார் முதல்-அமைச்சர் கருணாநிதி. முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் கொடுத்தார். பின்பு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு, வேகவைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் வழங்கினார். முக்கியமான தலைவர்களுடைய பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்கவும் உத்தரவிட்டவர்தான் கருணாநிதி.
அதற்கு பின்பு முதல்-அமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் கலவை சாதம் வழங்க உத்தரவிட்டார். 1921-ல் நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, 2021-ம் ஆண்டு வரைக்கும் இருந்ததெல்லாம் மதிய உணவு திட்டங்கள் தான்.
சாப்பிடவில்லை
இந்த நிலையில் சென்னை அசோக் நகரில் இருக்கக்கூடிய பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவிற்காக நான் சென்றேன். அங்கு படிக்கின்ற மாணவியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். பேசிக்கொண்டு இருக்கும்போது "காலையில் என்ன சாப்பிட்டீங்க?" என்று கேட்டேன். பெரும்பாலானவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நாங்கள், "சாப்பிடவில்லை" என்று சொன்னார்கள். "எங்கள் வீட்டில் சமையல் செய்யவில்லை" என்று ஒரு மாணவி சொன்னார்.
"மதியானம் பள்ளியில் சென்று சாப்பிடு என்று அம்மா சொல்லிட்டாங்க" என்று இன்னொரு மாணவி சொன்னார். "காலையில் டீ மட்டும் குடித்துவிட்டு வந்திருக்கிறேன்" என்று இன்னொரு மாணவி சொன்னார். இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த காலை உணவு திட்டம் உருவாக்கவேண்டும் என்று நான் அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன்.
அதிகாரிகள் சொன்னார்கள், நிதிச்சுமை போன்ற காரணங்களை எல்லாம் சொன்னார்கள். இதைவிட வேறு எதும் முக்கியமாக இருக்க முடியாது என்று கட்டாயப்படுத்தி நான்தான் இந்த திட்டத்தை விரைவாக நடத்தவேண்டும் என்று சொன்னேன். பொதுவாகவே மனிதர்களுக்கு மூளை ஒழுங்காக, முறையாக வேலை செய்யவேண்டும் என்றால் வயிறு நிறைந்திருக்க வேண்டும்.
களஆய்வு
மூன்று வேளை உணவு தேவை. அதிலேயும் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்போதுதான் அதிகமாக பணியாற்ற முடியும். காலை உணவு, மிக மிக முக்கியம். ஆனால், காலை உணவே சாப்பிடாத பிள்ளைகளால் எப்படி கல்வியில் கவனம் செலுத்த முடியும்? இது ஒருபுறம்.
மற்றொருபுறம், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஒரு களஆய்வு நடத்தினோம். அதில், ரத்தசோகை அதிகமாக நிறைய மாணவர்கள்கிட்ட இருந்தது. ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு காலை உணவு வழங்கினால் அவர்களுக்கு கூடுதலாக சத்துகள் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதனால்தான் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வத்தோடும், அக்கறையோடும் நாங்கள் இந்த பணியில் இறங்கினோம்.
பசியுடன் பள்ளிக்கு வருகின்றவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித்தரக்கூடாது என்று நினைத்தேன். அதனுடைய விளைவுதான், இன்றைக்கு, 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் படிக்கின்ற, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நிதி முதலீடு
நம்முடைய எதிர்கால நம்பிக்கைகளான பள்ளிக் குழந்தைகளுக்கான திட்டத்திற்குரிய தொகையை, நிதி ஒதுக்கீடு என்று சொல்வதைவிட, நிதி முதலீடு என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.
ஏனென்றால், மாணவர்களின் அறிவை மேம்படுத்த, உள்ளத்தை மேம்படுத்த அரசு நிதி முதலீடு செய்திருக்கிறது. அந்த முதலீடு நிச்சயமாக நாட்டுக்கு லாபம் தரும் வகையிலான ஆற்றலாக, திறமையாக வெளிப்படும். அதுதான் உண்மை.
நம்பர்-1 மாநிலம் தமிழ்நாடு
இந்தியாவிலேயே புதுப்புது திட்டங்களைக் கொண்டு வந்து, முன்னோடி மாநிலமாக இருப்பதில் நம்பர்-1 மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான்.
அதில் மிகமிக முக்கியமான இந்த காலை உணவு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?.
முதலாவது மாணவர்கள் பசியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும். 2-வது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் அந்த குழந்தைகள் இருக்க வேண்டும். 3-வது ரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்கவேண்டும். 4-வது மாணவர்களுடைய வருகை பதிவை அதிகரிக்க வேண்டும். 5-வது வேலைக்கு செல்கின்ற தாய்மார்களோட பணிச்சுமைய குறைக்க வேண்டும்.
இந்த 5 நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம். முழுமையாக அடைந்தே தீருவோம்.
எல்லோருக்குமான அரசு
எதிர்கால தமிழ்ச் சமூகம் பயனடையப் போகிறது. குழந்தைகளுடைய வளர்ச்சியில்தான் நம்முடைய அரசாங்கத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. இந்த அரசு யாருக்கான அரசு என்று கேட்கிறவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், "எங்களுக்கு யாருமில்லை" என்று யார் நினைக்கிறார்களோ, "எங்களை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?" என்று யார் கேட்கிறார்களோ அவர்கள் எல்லோருக்குமான அரசுதான் இந்த அரசு என்று சொல்வேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.