புதையல் இருப்பதாக கூறப்பட்ட இரும்பு பெட்டி உடைப்பு
குடியாத்தத்தில் புதையல் இருப்பதாக கூறப்பட்ட இரும்பு பெட்டி உடைக்கப்பட்டது. அதில் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதையல் இருப்பதாக...
குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இத்திரீஸ் (வயது 57). இவருக்கு சொந்தமான சுமார் 1000 கிலோ எடை கொண்ட இரும்பு பெட்டியை மேல்ஆலத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஜோகிமடம் மசூதிக்கு கடந்த மாதம் 10-ந் தேதி வழங்கினார்.
இத்திரீஸ் வழங்கிய இரும்பு பெட்டியை ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கும்போது அந்தபெட்டி கண்டெடுத்ததாகவும், அதில் விலை மதிப்புள்ள பொருட்கள் மற்றும் புதையல் இருப்பதாகவும் வதந்தியை பரப்பினர். இதனையடுத்து குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர் அப்போது ஒரு தரப்பினர் அதில் புதையல் உள்ளது, உடனடியாக உடைக்க வேண்டும் என வற்புறுத்தினர்.
அதன்பேரில் அந்த பெட்டியை உடைக்க முயன்றபோது அதை உடைக்க முடியாததால் தாலுகா அலுவலகம் கொண்டு சென்று பத்திரமாக வைத்தனர்.
எதுவும் இல்லை
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று காலையில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில், தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாத், கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை, சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் ஜோகிமடம் மசூதி நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டது.
ஆனால் அதில் புதையல் ஏதுமில்லை. சில்லறை நாணயங்கள் சில இருந்தன. மேலும் 1927-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த சுதேச மித்திரன் பத்திரிகை இருந்தது. புதையல் இருப்பதாக நினைத்து வந்திருந்த பொதுமக்கள் அதில் ஏதும் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் சென்றனர்.