கோவில் பூட்டை உடைத்து 6½ கிலோ வெள்ளி கவசம்-தாலிச்சங்கிலி கொள்ளை
உப்பிலியபுரம் அருகே கோவில் பூட்டை உடைத்து 6½ கிலோ வெள்ளி கவசம், தாலிச்சங்கிலியை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உப்பிலியபுரம் அருகே கோவில் பூட்டை உடைத்து 6½ கிலோ வெள்ளி கவசம், தாலிச்சங்கிலியை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாரியம்மன் கோவில்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே டி.முருங்கப்பட்டியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி ராஜேந்திரன். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்து, கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கருவறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனையடுத்து அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
வெள்ளி கவசம், தாலிச்சங்கிலி கொள்ளை
அதன் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் சந்தியாகு, பிரபாகரன், பாலமுருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6½ கிலோ வெள்ளி கவசம், தாலிச்சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும். மேலும் உண்டியலை உடைத்து காணிக்கைகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
முகமூடி கொள்ளையர்கள்
இதனை தொடர்ந்து கோவில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.இதில் நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் இந்த துணிகர கொள்ளையில் ஈடபட்டு இருந்தது பதிவாகி இருந்தது. கொள்ளை சம்பவத்தின் போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தும் பொதுமக்கள் நள்ளிரவில் அசந்து தூங்கியதால், அலாரம் ஒலித்தது தெரியவில்லை.இ்ந்நிலையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த மாதம் இக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகநல்லூர் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தொடரும் கொள்ளை சம்பவத்தால் பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.