வீட்டின் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு
சுல்தான்பேட்டையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைனான்ஸ் நிறுவனம்
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 48). இவர் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சிவா, கார்த்திக், பிரபாகரன் மற்றும் சோலைமலை ஆகிய 4 பேர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், சுப்பிரமணியின் வீட்டுக்கு அருகிலேயே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் சுப்பிரமணி உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க கரூருக்கு புறப்பட்டு சென்றார். மேலும் சிவா உள்பட 4 பேரும், பணம் வசூல் செய்ய வெளியே சென்றுவிட்டனர்.
திருட்டு
பின்னர் மதியம் 2 மணியளவில் சிவா மட்டும் வீடு திரும்பினார். அப்போது அவர் தங்கி இருந்த வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் மற்றும் மேசைகளின் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவற்றில் நிறுவனத்துக்கு வசூல் செய்து வைத்திருந்த ரூ.34 ஆயிரத்து 700 திருடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக சுப்பிரமணிக்கு, சிவா தகவல் கொடுத்தார்.
விசாரணை
இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய அவர், சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கருப்பு தொப்பி, முக கவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமி திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.