வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 35). இவர் சொந்தமாக ஆம்புலன்சு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். வெங்கடேசின் மனைவி ராகிலா பேகம் சென்னையில் நர்சிங் பயிற்சி ஒன்றில் இருந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ராகிலா பேகத்தை நேற்று முன்தினம் இரவு சென்னையில் விட்டு வருவதற்காக வெங்கடேஷ் வீட்டை பூட்டி விட்டு அரியலூருக்கு சென்று அங்கிருந்து அவரை ரெயிலில் அழைத்து சென்றார். வீட்டின் மேல் தளத்தில் வெங்கடேசின் பெற்றோர் வசித்து வருகின்றனர். நேற்று காலை வெங்கடேசின் தாய் ராணி முற்றத்தை கூட்டுவதற்காக வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ கதவு திறந்து நிலையில் காணப்பட்டது. அதில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருடு போயிருந்தது. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.