கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு


கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
x

ஆரணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உண்டியல் உடைப்பு

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் ஆதிநாத பகவான் திகம்பர் ஜெயின் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டி சென்றனர்.

இன்று அதிகாலை மண்டல பூஜைக்காக கோவிலை திறக்க வந்த பூசாரி கோவிலில் உள் பகுதியில் உள்ள கேட்டுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டும், அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் உள்ளே சென்று பார்க்கும் போது ஜோலமாலினி, பத்மாவதி தாயார், புதிதாக அமைக்கப்பட்ட பத்மாவதி தாயார் ஆகிய 3 சிலைகளில் கழுத்தில் இருந்த தங்க தாலி, பொட்டு திருட்டு போய் இருந்தது. மேலும் அங்கிருந்த ஒரு உண்டியலை காணவில்லை.

இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகியும் செயலாளருமான சுந்தர்ராஜிடம் உடனடியாக தகவல் தெரிவித்தார். அவர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ரூ.1 லட்சம் திருட்டு

அப்போது கோவிலில் பின்பகுதியில் உள்ள ஏரியில் கோவில் உள்வளாகத்தில் இருந்த உண்டியலை எடுத்துச்சென்று உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை ஏரியில் மர்மநபர்கள் போட்டு ெசன்றது தெரிய வந்தது.

இந்த கோவில் கடந்த மாதம் 10-ந் தேதி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆண்டுக்கு ஒருமுறை தான் உண்டியல் பிரிப்பது வழக்கம்.

தற்போது கும்பாபிஷேகம் முடிந்து 30 நாட்கள் ஆகிறது. ஆகவே கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களின் காணிக்கை அதிகளவில் செலுத்தப்பட்டு இருப்பதால் உண்டியல் காணிக்கையாக சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவூர் பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் உண்டியல் காணிக்கை, நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story