கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பந்தலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே உப்பட்டி பஜாரில் செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் மேஜை உள்ளே வைக்கப்பட்டு இருந்த ரூ.2,500 மற்றும் உண்டியல் பணம் திருட்டு போனது தெரியவந்தது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமரா காட்சிகளை பார்த்த போது, வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து திருடி விட்டு, அருகே பள்ளி மேற்கூரை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் கமிட்டியினர் தேவாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலில் திருடிய ஏலமன்னா பெருங்கரை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 19) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.