655 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை


655 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை
x
தினத்தந்தி 19 Oct 2023 7:30 PM GMT (Updated: 19 Oct 2023 7:30 PM GMT)

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 655 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. பேரணிக்கு கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரியங்கா கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். பேரணி பி.எஸ்.என்.எல். அலுவலகம், தபால் நிலையம் வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து நிறைவடைந்தது.

முன்னதாக விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் டாக்டர்கள் கார்த்திகேயன், முருகேசன், மாரிமுத்து, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:-


மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் அதிக அளவில் 30 சதவீதம் பெண்களை பாதிக்கிறது. நாட்டில் 13 நிமிடத்திற்கும் ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார். இந்த நோயால் அதிகமாக 35 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 4 நிமிடத்திற்கு ஒரு மார்பக புற்றுநோய் இந்தியாவில் கண்டறியப்படுகிறது. தாய் அல்லது சகோதரி மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும், அதிக உடல் எடை உள்ளவர்கள், தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், கதிர்வீச்சு தாக்கம் மற்றும் மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி ஏற்படுதல், அதிக வலி, மார்பக காம்பில் நீர் அல்லது ரத்தம் வடிவது, மார்பக காம்பு உள்வாங்குவது, மார்பக தோலின் நிறம் மாறி இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ஆரம்ப கட்டத்தில் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தால் 98 சதவீதம் முழுவதுமாக குணமடைய வாய்ப்பு உள்ளது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மோமோகிராம் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுவரைக்கும் 655 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 18 பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story