ஊட்டி மலை ரெயிலில் முதல் பெண்ணாக பிரேக்ஸ் உமன் நியமனம்...!
ஊட்டி மலை ரெயிலில் பிரேக்ஸ் உமனாக சிவ ஜோதியை என்ற பெண் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊட்டி,
மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் உதகைக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு 1899-ம் ஆண்டு முதல் மலை ரயில் சேவை தொடங்கியது.
இத்தகைய பழமை வாய்ந்த மலை ரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இத்தகைய மலை ரெயில் சேவையில் பிரேக்ஸ் மென்களின் பணி மிகவும் முக்கியமான ஒன்று. ஆசியாவிலேயே மிக செங்குத்தான மலை ரெயில் பாதையில் செல்லும் நீலகிரி மலை ரெயிலில் முதன் முதலாக பிரேக்ஸ் மென்னுக்கு பதிலாக பிரேக்ஸ் உமன் பணிக்கு சிவஜோதி என்ற பெண்மணியை ரெயில்வேத்துறை நியமனம் செய்துள்ளது.
இவர் கடந்த 8 வருடங்களாக குன்னூர் கோச் மற்றும் வேகன் பிரிவில் பணியாற்றி வந்தார். நீலகிரி மலை ரெயில் முதல் பிரேக்ஸ் வுமனாக பணியாற்றிவரும் சிவஜோதிக்கு சுற்றுலா பயணிகள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் காலை7.10 மணிக்கு புறப்பட்டுச் சென்ற மலை ரெயிலில் பிரேக்ஸ் உமன் சிவஜோதி பச்சைக் கொடியை அசைத்தபடி மகிழ்ச்சியுடன் தனது பணியை தொடங்கினார்.