பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்;கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது


பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்;கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது
x

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, தலையாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, தலையாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன், மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகினார்.

அப்போது அவர் தனக்கும், கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கிருஷ்ணன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையை நாடினார்.

2 பேர் கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தலையாரி ராஜேஷ் கண்ணன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் குமாரிடம் கிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் குமார், தலையாரி ராஜேஷ் கண்ணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story