திருவாரூர் சார் பதிவாளர் மீதான லஞ்ச வழக்கு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு
திருவாரூர் சார் பதிவாளர் மீது பதிவான லஞ்ச வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
மன்னார்குடி தாலுகாவைச் சேர்ந்தவர் வினோதினி. இவர், திருவாரூர் சார் பதிவாளர் தினேசுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதில், தானமாக 2 நிலம் வாங்கினேன். இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து, பத்திரத்தை வழங்க சார் பதிவாளர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார் என்று கூறியிருந்தார். தன்னை வந்து நேரில் சந்திக்கும்படி தினேஷ் செல்போனில் பேசியதை பதிவு செய்தும், ஆதாரமாக போலீசில் அவர் கொடுத்தார்.
வழக்குப்பதிவு
இதன் அடிப்படையில், 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை போலீசார் புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கென்னடி வாங்கியபோது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதன்பின்னர், தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சார் பதிவாளர் தினேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
வழக்கு ரத்து
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, "புகார்தாரர் வினோதினி முத்திரைக்கட்டணத்தை குறைப்பதற்காக வெற்று நிலம் என்று கூறி தானப்பத்திரத்தை பதிவு செய்துள்ளார். இதை கண்டுபிடித்து, கூடுதல் கட்டணத்தை செலுத்தும்படி சார் பதிவாளர் கூறியதால், அவரை சந்திக்க புகார்தாரர் தன் கணவருடன் சென்றுள்ளார். ஆனால், அவரை சந்திக்க அங்குள்ள காவலாளி அனுமதிக்கவில்லை. ஆடியோ பதிவில் கூட சார் பதிவாளர் லஞ்சம் கேட்டதாகவோ அல்லது கென்னடியிடம் லஞ்சப்பணத்தை கொடுக்கும்படி கூறியதாகவோ ஆதாரம் இல்லை என்று வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சார் பதிவாளர் மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.