யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகள் மூடப்படும்: ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்
கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள செங்கல் சூளைகள் அகற்றப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை,
கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கல் சூளைகள் ஐகோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கல் சூளைகள், ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியின்றி செயல்படும் இந்த செங்கல் சூளைகளை மூட உத்தரவிட வேண்டும் எனவும் ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அனுமதி உள்ளதா?
மனுவை விசாரித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கல் சூளைகள் அரசு அனுமதி பெற்று செயல்படுகின்றதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செங்கல் சூளைகள் மூடப்பட்ட தடாகம் பகுதிகளில் மண் எடுத்ததால் ஏற்பட்ட குழிகளை மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை மூட உத்தரவிடப்படும் என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மதுபாட்டில்கள்
பின்னர், மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எப்படி அமல்படுத்தலாம்? என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது என்றும், அவற்றை பரிசீலித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து வருகிற அக்டோபர் 11-ந் தேதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.