செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்
வில்லியநல்லூர் கிராமத்தில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மணல்மேடு:
வில்லியநல்லூர் கிராமத்தில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குடிசை தொழில்
செங்கல் என்பது கட்டிடம் கட்டுவதற்கான மூலப்பொருட்களில் முக்கியமான ஒன்றாகும். செங்கல் தயாரிப்பு பெரிய தொழிற்சாலைகளில் இடம்பெறுகின்ற அதேவேளையில், கிராமப்பகுதிகளில் குடிசை தொழிலாகவும், சிறு தொழிலாகவும் செய்யப்பட்டு வருகிறது. பெரிய தொழிற்சாலைகள் எந்திரங்களை பயன்படுத்தி செங்கல்களை உற்பத்தி செய்கின்றன.
ஆனால் குடிசைத்தொழில்களில் மனித சக்தியே முக்கியமானதாக உள்ளது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு, வில்லியநல்லூர், பட்டவர்த்தி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செங்கல் தயாரிக்க கோடைக்காலம் தான் ஏற்றக்காலமாகும். இதனால் வெயில் அதிகமாக இருக்கும் மாதங்களில் செங்கல் தயாரிக்கும் பணியில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற காலம்
இதுகுறித்து வில்லியநல்லூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற காலமாகும். இதனால் இந்த காலகட்டங்களில் அதிகமானோர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணுடன், ஆற்றிலிருந்து எடுக்கக்கூடிய சவுடு மண்ணை கலந்து பதப்படுத்தி, அச்சுகளில் போட்டு செங்கற்களை வார்த்து எடுத்து சுமார் 6 நாட்கள் வெயிலில் நன்கு காய வைப்போம். அதன் பின்னர் காய வைத்த செங்கற்களை சூளையில் அடுக்கி வைத்து தீமூட்டி வேக வைப்போம்.
அதிக விலை கொடுத்து...
செங்கற்கள் நன்கு சுட்டு விற்பனைக்கு தயாரான நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம். தற்போது செங்கல் தயாரிக்க ஏற்ற மண்ணும் சரிவர கிடைப்பதில்லை.
கிடைத்தாலும் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. மேலும் மழைக்கு முன்பு செங்கல்லை தயாரித்து நல்ல விலைக்கு விற்றால் தான் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.