லாரி மோதி கொத்தனார் பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மோதி கொத்தனார் பலியானதை அடுத்து மணல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவெண்ணெய்நல்லூர்
கொத்தனார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலத்தில் உள்ள மணல் குவாரிக்கு மணல் ஏற்ற செல்லும் லாரிகள் அங்குள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் நிறுத்தி வைப்பதற்காக இடம் உள்ளது. தினமும் சுமார் 500 முதல் 1000 வரையிலான லாரிகள் இந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பராயன் மகன் அய்யனார் (வயது37). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மணல் லாரிகள் நிறுத்தி வைக்கும் மைதானம் வழியாக சென்றார். அப்போது வேகமாக வந்த மணல் லாரி மோதியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை மறியல்
இதுபற்றிய தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அய்யனாா் பலியான சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெண்ணெய்நல்லூர்-பண்ருட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணல் லாரிகளை ஆலங்குப்பம் மைதானத்தில் நிறுத்தக்கூடாது, பலியான அய்யனார் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவெண்ணெய்நல்லூர்-பண்ருட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.