திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தனார் தீக்குளிப்பு
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் பலத்த தீக்காயங்களுடன் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் பலத்த தீக்காயங்களுடன் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொத்தனார்
திருவாரூர் மாவட்டம் திருமதிகுன்னம் அருகே உள்ள காவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 35). கொத்தனார். இவரது மனைவி உமாபாரதி. இவர்களுக்கு பார்கவி, யாசிகா என்று 2 குழந்தைகள் உள்ளனர். இதில் பார்கவி 5-ம் வகுப்பும், யாஷிகா 4-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
சிலம்பரசன், கொரடாச்சேரியை சேர்ந்த துரை என்பவரிடம் வீடுகட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தில் ரூ.1 லட்சம் வரை திருப்பி கொடுத்துள்ளார்.
தீக்குளித்தார்
மீதம் ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டி உள்ள நிலையில் துரை மேலும் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தன்னை மிரட்டியதாக கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் சிலம்பரசன் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் குறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விசாரணையில் திருப்தி இல்லாத சிலம்பரசன் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் பாட்டிலில் மறைந்து வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனையடுத்து வலி தாங்காமல் அவர் சத்தம் போட்டுகொண்டே கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடி வரை ஓடினார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் சாதுரியமாக செயல்பட்டு சிலம்பரசனை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிலம்பரசன் மனைவி கூறுகையில், எனது கணவர் வாங்கிய பணத்தில் ரூ.1 லட்சம் வரை கொடுத்துவிட்டோம். மீதி பணத்தை திருப்பி கொடுப்பதற்குள், பணம் கொடுத்தவர் தினமும் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்து வந்தார். இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் எனது கணவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.
கைது
கொத்தனார் தீக்குளித்த சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிலம்பரசன் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் கொரடாச்சேரி போலீசார் துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.