திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
திருப்பத்தூர் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் திவ்யா (வயது 19). இவருக்கும் திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஹரிஷ் (25) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெரியோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சப்ளையராக வேலை செய்ய ஹரிஷ் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த திவ்யா திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹரிசுக்கு போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனம் உடைந்த திவ்யா வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார்.
பின்னர் வேலை முடித்து இரவு வீடு திரும்பிய ஹரிஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவை திறக்காததால் மனைவி கோபத்தில் உள்ளார் என நினைத்துக் கொண்டு வீட்டின் வெளியே படுத்து தூங்கி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட திவ்யாவை அழைக்க உறவினர்கள் வந்து கதவை தட்டினர். நீண்ட நேரம் ஆகியும் திவ்யா கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திவ்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திவ்யாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குக்பதிவு செய்து விசாரணைக்காக ஹரிசை திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பானு மேல் விசாரணை நடத்த உள்ளார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.