திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உறவினர்கள் சாலைமறியல்


திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உறவினர்கள் சாலைமறியல்
x

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த திருவூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25) மதுரவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கும் அம்பத்தூர் எம்.கே.பி.நகரை சேர்ந்த ஜீவிதா (22) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது.

இவர்கள் செவ்வாப்பேட்டை அடுத்த திருவூரில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை கார்த்திக் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். கார்த்திக்கின் தாயார் சொந்த ஊரான ஆம்பூர் சென்று இருந்தார். கார்த்திக்கின் தம்பி ரமேசும் வேலைக்கு சென்று விட்டார். ஜீவிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜீவிதா கணவர் கார்த்திக்கு போன் செய்து தனக்கு உடல்நிலை சரியில்லை உடனே வீட்டுக்கு வரும்படி கூறியதாக தெரிகிறது. கார்த்திக் மாத்திரை போட்டுகொள் சீக்கிரம் வீட்டுக்கு வருகிறேன் என கூறினார். இதையடுத்து ஜீவிதா வீட்டில் யாரும் இல்லை எனவே வீட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு வெளியே சாவியை வைத்து விடுகிறேன் நான் தூங்கிவிட்டால் நீ வந்து எடுத்து திறந்து கொள் என கார்த்திக்கிடம் கூறியதாக தெரிகிறது. கார்த்திக் வேலைமுடிந்து வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது ஜீவிதா படுக்கையறையில் மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் ஜீவிதா உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜீவிதாவின் தந்தை திருமலைராஜ் கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார்த்திக்-ஜீவிதா இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது. இதையடுத்து உயிரிழந்த ஜீவிதாவின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்ய கூடாது. சடலத்தையும் வாங்க மாட்டோம் என்று கூறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவள்ளூர் ஜே.என் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story