திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் மணப்பெண்ணின் தந்தை தற்கொலை
காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் மணப்பெண்ணின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முன்னாள் காதலன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்
கச்சிராயப்பாளையம்
சுமை தூக்கும் தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் புதுகாலனியை சேர்ந்தவா் குமார் (வயது 50). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகள் காவியா(25).
பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்தபோது சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா நத்தக்கரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துசெல்வன் என்பவரை காதலித்தார்.
திருமண ஏற்பாடு
இந்த நிலையில் முத்துசெல்வனுக்கு ஏற்கனவே திருமணமானது பற்றி அறிந்த காவியா, அவருடனான காதலை முறித்துக்கொண்டார். பின்னர் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியை சேர்ந்த வாலிபருடன் காவியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 27-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி திருமண விழாவில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
பெண் வீ்ட்டார் அதிர்ச்சி
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதைபோல திடீரென மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்துமாறு பெண் வீ்ட்டாரிடம் கூறினார்கள். இதைக் கேட்டு காவியா மற்றும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, காவியாவின் முன்னாள் காதலனான முத்துசெல்வன் ஏற்கனவே காவியாவை காதலித்தபோது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளையின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்தியதும், அதற்கு அவரது அண்ணன் சரவணன், அக்காள் அம்பிகா, தங்கை முத்தம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தொியவந்தது.
தற்கொலை
இந்த நிலையில் மகளின் திருமணம் நின்றுபோனதால் மனமுடைந்த குமாா், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கச்சிராயப்பாளையம் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து அவரது மனைவி உமா கொடுத்த புகாரின் பேரில் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக முத்துசெல்வன், சரவணன், அம்பிகா, முத்தம்மாள் ஆகிய 4 பேர் மீதும் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.