பேராவூரணியில் காட்டாற்றின் குறுக்கே ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிஅசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


பேராவூரணியில் காட்டாற்றின் குறுக்கே ரூ.6¼ கோடியில்  உயர்மட்ட பாலம் கட்டும் பணிஅசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

பேராவூரணியில் காட்டாற்றின் குறுக்கே ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

பேராவூரணியில் காட்டாற்றின் குறுக்கே ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

காட்டாற்று வெள்ளம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில், செல்வவிநாயகர்புரம் அருகே பூனைகுத்தி காட்டாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த பாலம் எதிரே பஸ் போன்ற வாகனங்கள் வரும் போது, மற்றொரு வாகனம் செல்ல முடியாத அளவிற்கு குறுகலாக இருந்தது.

மேலும், மழை காலங்களில் பாலத்தை தாண்டி ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, பாலத்தின் அடிப்பாகம் சேதமடைந்தது.

உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை

இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அசோக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் சேதம், உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல், அறந்தாங்கி சாலை சித்தாதிக்காடு காட்டாறு தரைப்பாலம், பூக்கொல்லை சாலை பூனைக்குத்தி காட்டாறு தரைப்பாலம் உள்ளிட்ட 3 பாலங்களையும் உயர் மட்ட பாலங்களாக அமைத்து தர வேண்டும் என அசோக்குமார் எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.

எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

அதன்பேரில், பூனைக்குத்தி காட்டாறு பாலம், அறந்தாங்கி சாலையில் உள்ள சித்தாதிக்காடு தரைப்பாலம் ஆகிய இரண்டையும் உயர்மட்ட பாலமாக மாற்றுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக பட்டுக்கோட்டை சாலையில் பூனைகுத்தி காட்டாறு பாலத்தினை முழுமையாக இடித்து விட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முத்துமாணிக்கம், ரவிச்சந்திரன், இளங்கோவன், தி.மு.க. மாவட்ட அவை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் சேகர், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத்தலைவர் பழனிவேல், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் அருண்குமார், நெடுஞ்சாலை துறை (திட்டங்கள்) உதவி பொறியாளர் சுதாகர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.6¼ கோடியில்...

ரூ.6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த பாலம் 63 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலமாக அமைய உள்ளது. இந்த பாலம் அமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் பட்டுக்கோட்டை செல்லும் சாலை துண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story