4-வது மாற்றுப்பாதையில் பாலம் கட்டும் பணி


4-வது மாற்றுப்பாதையில் பாலம் கட்டும் பணி
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

காட்டேரி-ஊட்டி இடையே 4-வது மாற்றுப்பாதையில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

ஊட்டி,

காட்டேரி-ஊட்டி இடையே 4-வது மாற்றுப்பாதையில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 30 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மேட்டுப்பாளையம் வந்து, அங்கிருந்து கோத்தகிரி அல்லது குன்னூர் மலைப்பாதை வழியாக ஊட்டி வருகிறார்கள். சீசன் நேரங்களில் 2 சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் பருவமழை காலங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அந்த சமயங்களில் ஊட்டிக்கு வருவதற்கு ஏதுவாக ஹெத்தை- மஞ்சூர் வழியாக 3-வது மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

4-வது மாற்றுப்பாதை

மேட்டுப்பாளையத்தில் இருந்து காட்டேரி வந்த பின்னர், குன்னூர் நகருக்குள் செல்லாமல் காட்டேரியில் இருந்து சேலாஸ், கேத்தி பாலாடா, காந்திநகர், லவ்டேல் சந்திப்பு வழியாக ஊட்டிக்கு செல்ல 4-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காட்டேரியில் இருந்து ஊட்டி வரை 20½ கி.மீ. தூரத்திற்கு ரூ.40 கோடி செலவில் 4-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. லவ்டேல் பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலங்கள் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. இதன்படி இங்கு 5½ மீட்டர் அகலம் உள்ள சாலைகள் தற்போது 7 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக 136 இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கப்படுகிறது.

இயற்கை காட்சிகள்

இந்த வழியாக ஊட்டிக்கு செல்ல 2½ கி.மீ. தூரம் அதிகம். ஆனால், சீசன் நேரங்களில் குன்னூர் நகருக்குள் செல்லாமல் 4-வது மாற்றுப்பாதை வழியாக விரைந்து செல்லலாம். அந்த வழியாக காட்டேரி அணை உள்பட பல்வேறு இயற்கை காட்சிகள் உள்ளன. அவற்றை கண்டு ரசிக்கலாம். இந்த பணிகளை அடுத்த ஆண்டு சீசனுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story