மார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் வரத்து


மார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் வரத்து
x
தினத்தந்தி 26 Oct 2023 1:28 PM GMT (Updated: 26 Oct 2023 2:14 PM GMT)

தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று சுமார் 7 டன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

வரத்து அதிகரிப்பு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

நேற்று அவினாசி, சேவூர், பல்லடம், அவினாசிபாளையம் மற்றும் திருப்பூரின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மார்க்கெட்டிற்கு காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 4 டன், பீர்க்கங்காய், 7 டன் சுரைக்காய் வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இவை சுமார் 14 கிலோ, 18 கிலோ எடையளவில் பைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

விலை குறைவு

வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் சுமார் 18 கிலோ எடை கொண்ட ஒரு பை சுரைக்காய் மொத்த வியாபார விலையில் ரூ.400 முதல் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு பை ரூ.150 முதல் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் கடந்த வாரம் சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பை பீர்க்கங்காய் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு பை ரூ.250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.120 முதல் ரூ.180 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் பாகற்காய், புடலை விலை மட்டும் அதிகமாக இருந்தது. 20 கிலோ பாகற்காய் மூட்டை ரூ.700 முதல் ரூ.800, 15 கிலோ புடலை ரூ.500 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.



Next Story