ஆங்கிலேயர் காலத்து தெற்கு குமுளை வடிகால் வாய்க்கால்


ஆங்கிலேயர் காலத்து தெற்கு குமுளை வடிகால் வாய்க்கால்
x

ஆங்கிலேயர் காலத்து தெற்கு குமுளை வடிகால் வாய்க்கால்

தஞ்சாவூர்

ஆலடிக்குமுளை ஊராட்சியில், 5 வேலி நிலங்கள், 3 குளங்களுக்கு பாசன வசதி தந்த ஆங்கிலேயர் காலத்து வடிகால் வாய்க்கால் 25 ஆண்டுகாலமாக தூர் வாராததால் உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்து வடிகால் வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலடிக்குமுளை, பாளமுத்தி ஆகிய இரண்டு ஊராட்சிகளையும் இணைக்கக்கூடிய தெற்கு குமுளை என்ற வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் ஆங்கிலேயர் காலத்தில் 1930-ம் ஆண்டு கட்டப்பட்டது.

மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது ஆலடிக்கு முளை தாமரைக் குளம், அய்யனார் குளம், செம்பிரான் குளம் உள்ளிட்ட குளங்களில் நீர் நிரம்பி அந்த நீரானது தெற்கு குமுளை வடிகால் மூலமாக சுமார் 5 வேலி நிலத்திற்கு பாசன வசதி கொடுத்துவிட்டு அதனையும் தாண்டி உபரி நீர் இந்த வடிகால் வாய்க்கால் மூலமாக மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் சென்று கலந்தது.

3 கிலோ மீட்டர் தூரம்

இந்த வடிகால் வாய்க்கால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பாலமுத்தி ஊராட்சியிலும், ஆலடிக்குமுளை ஊராட்சியிலும் சேர்த்து சுமார் 5 வேலிக்கு மேற்பட்ட நிலப்பரப்புகள் பாசன வசதி அடைந்து வந்தது.

இந்த வாய்க்காலின் மேற்பகுதியில் ராஜா மடம் கிளை வாய்க்கால் ஓடுகிறது. ராஜாமடம் கிளை வாய்க்காலின் அடிப்பகுதியில் 1930-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கல்வெட்டுடன் இன்றும் கம்பீரமாக இந்த ஆற்றுப்பாலம் இருக்கிறது.

25 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை

வாய்க்காலில், 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி வரக்கூடிய பகுதியில் முற்களும், செடி, கொடிகளும் நிறைந்து இருக்கிறது. இந்த வாய்க்காலின் அருகிலுள்ள சிலர் இந்த வாய்க்கால் பகுதியையும் சேர்த்து ஆக்கிரமித்து உள்ளனர்.

இந்த வடிகால் வாய்க்கால் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் தூர்ந்து போய் ஒரு சிறிய சாக்கடை போல காட்சியளிக்கிறது.

உடனடியாக தூர்வார கோரிக்கை

எனவே இந்த பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை தூர்வாரி, சுத்தப்படுத்தி மீண்டும் குளங்கள் நிரம்பவும், விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவும் தெற்கு குமுளை வாய்க்காலை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story