கறிக்கோழி கொள்முதல் விலை சரிவு


கறிக்கோழி கொள்முதல் விலை சரிவு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் நுகர்வு குறைந்ததால், கறிக்கோழி கொள்முதல் விலை சரிந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தொடர் மழையால் நுகர்வு குறைந்ததால், கறிக்கோழி கொள்முதல் விலை சரிந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

உற்பத்தி பண்ணைகள்

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கொள்முதல் விலை சரிவு

தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. கடந்த 1-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.115(உயிருடன்) ஆக இருந்தது. 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ரூ.106, 13-ந் தேதி முதல் ரூ.96 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, கேரளா உள்பட பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கறிக்கோழி நுகர்வு சரிந்துவிட்டது. அதற்கு ஏற்ப பண்ணை கொள்முதல் விலையும் சரிந்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் கிலோவிற்கு ரூ.19 வரை கொள்முதல் விலை சரிவடைந்ததுவிட்டது. இது கறிக்கோழி உற்பத்தியாளர்களை கவலை அடைய செய்துள்ளது. அதாவது உற்பத்தி செலவும், விற்பனை விலையும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இதற்கிடையில் கொள்முதல் விலை தொடர் சரிவு காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் கறிக்கோழி இறைச்சி விலை கிலோ ரூ.190 முதல் ரூ.210 வரை உள்ளது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கிலோ ரூ.230 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய இறைச்சி விலை ஒரு சில இடங்களில் சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. கறிக்கோழி இறைச்சி விலை குறைந்தது இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Next Story