தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கக்கோரியும், கள்ளுக்கான தடையை நீக்கக்கோரியும் தேங்காய்களை உடைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டம்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞரணி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கக்கோரியும், கள்ளுக்கான தடையை நீக்கக்கோரியும், சத்துணவு திட்டத்தில் தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரியும் தேங்காய்களை ரோட்டில் உடைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி தலைமை தாங்கினார். மாநில தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கக்கோரி தேங்காய்களை ரோட்டில் உடைத்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
எம்.எல்.ஏ.க்கள்
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கந்தசாமி (சூலூர்) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். பா.ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பங்கேற்றார்.
தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140 நிர்ணயம் செய்ய வேண்டும். உரித்த பச்சை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 வீதம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
தென்னை சார்ந்த உபபொருட்களான நார் தொழில், நார் துகள்கள் போன்ற மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழிலுக்கான இடர்பாடுகளை களையக்கோரியும் கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
----