பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை, பணம் திருட்டு

பொள்ளாச்சியில் பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 22 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 22 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேக்கரி உரிமையாளர்
பொள்ளாச்சி நகரில் ஆண்டாள் அபிராமி நகரை சேர்ந்தவர் ரபிதீன் (வயது 46). இவர், மார்க்கெட் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தனது அண்ணன் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றார்.
அவர் காலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
2 வீடுகளில் திருட முயற்சி
இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபாசுஜிதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி னர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த னர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இதற்கிடையே ரபிதீன் வீட்டிற்கு அருகே உள்ள 2 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்து உள்ளனர். பொள்ளாச்சியில் ஒரே நாளில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






