வீட்டின் பூட்டை உடைத்து வெண்கல பொருட்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து வெண்கல பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து வெண்கல பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தேவகி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றார். இதையடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த வெண்கல குத்துவிளக்கு, வெண்கல குடம் உள்பட ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து தேவகி அளித்த புகாரின்பேரில், தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
குடிபோதையில் சாவு
*திருச்சி பிராட்டியூர் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த இவர் நேற்று முன்தினம் மாலையில் கருமண்டபத்்தை அடுத்த பால்பண்ணை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அந்த பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் பிணம்
*திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் கடத்தல்
*காட்டுப்புத்தூர் அருகே சீலைப்பிள்ளையார்புத்தூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சீலைப்பிள்ளையார் புத்தூரை சேர்ந்த செல்வராஜ் (20) என்பவர் மீது காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 பெண்கள் மீட்பு
*திருச்சி அரியமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர். அப்போது, பீமநகர், அரியமங்கலம் பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மீட்ட போலீசார் பெண்கள் காப்பத்திற்கு அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய அரியமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பர்வீன் பானு (35) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.






