வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சுகந்தி (வயது 43). கிருஷ்ணசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு சுகந்தி மகள்களை அழைத்துக்கொண்டு பிம்பலூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுகந்தி அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.