கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

பொள்ளாச்சியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பாலகோபாலபுரத்தில் செந்தில்குமார் (வயது 45) என்பவர் புரோசிங் சென்டர் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை செந்தில்குமார் கடையின் அருகே ஜோசப் என்பவர் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு, செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு விரைந்து வந்த செந்தில்குமார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல அருகில் உள்ள அன்சாரி வீதியில் பாத்திர கடையில் திருட முயற்சி நடந்துள்ளது. பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






