ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 52). இவர் அரவக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனம்பாள் (46). இவர் சின்னமுத்தம் பாளையம் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வடிவேல் உணவு சாப்பிட்டு விட்டு கீழ் வீட்டை பூட்டினார். பின்னர் தனது வீட்டின் மாடியில் உள்ள மேல் வீட்டிற்கு சென்று வடிவேல் தனது குடும்பத்தினருடன் தூங்கினார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து கீழே வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் அலமாரியில் இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி, 1 பவுன் மோதிரம் என மொத்தம் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வடிவேல் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.