ஒரே நாளில் 3 கோவில்களின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
காவேரிப்பாக்கம் அருகே ஒரேநாளில் 3 கோவில்களின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
காவேரிப்பாக்கம் அருகே ஒரேநாளில் 3 கோவில்களின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
நகைதிருட்டு
காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி மற்றும் கரும்பாத்தை அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இதில் அங்காளபரமேஸ்வரி கோவிலில் நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய பூசாரி வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர்கள் வந்து பார்த்தபோது கோவிலில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயின் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அதே கிராமத்தில் உள்ள கரும்பாத்தை அம்மன் கோவிலிலும் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
இதேபோல் சிறுகரும்பூர் பகுதியில் பழமை வாய்ந்த திரிபுராந்தக ஈஸ்வரர் கோவிலிலும் பூட்டு உடைக்கப்பட்டு 3 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஒரே நாளில் 3 கோவில்களின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.