மேற்பனைக்காடு பகுதியில் உடைந்த மதகுகள், பாலத்தை சீரமைக்காத அவலம்


மேற்பனைக்காடு பகுதிக்கு இன்னும் சில நாட்களில் கல்லணை தண்ணீர் வர உள்ள நிலையில் தண்ணீரை தேக்கி மாற்றிவிடும் மதகுகள், பாலம் உடைந்து சேதமடைந்துள்ளதை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

கல்லணை கடைமடை பாசனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு உள்பட ஏராளமான கிராமங்களில் கல்லணை தண்ணீர் மூலம் பாசனம் நடக்கிறது. தண்ணீர் வரத் தொடங்கியதும் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கி விடுவார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஒரு முறை மட்டுமே நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதுடன் அடுத்த சில நாட்களில் கல்லணையும் திறக்கப்பட்டு 501 கன அடி தண்ணீர் வெளியாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் கல்லணை தண்ணீர் மேற்பனைக்காடு வந்துவிடும். அதன் பிறகு சில நாட்களில் நாகுடி கடந்து மும்பாலை ஏரியை சென்றடையும். மும்பாலை ஏரிக்கு தண்ணீர் வரும் வரை எந்த இடத்திலும் கிளை வாய்க்கால்கள் திறக்கப்படுவதில்லை.

சேதமான பாலம், உடைந்து கிடக்கும் ஷட்டர்

மேற்பனைக்காடு நீர்த்தேக்கத்தில் இருந்து சொர்ணக்காடு பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பதற்காக ஒரு கதவு உள்ளது. அந்த இரும்பு (ஷட்டர்) கதவு உடைந்து நெழிந்து ஏற்ற இறக்க முடியாத நிலையில் பாதி அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதகுகளின் தடுப்புச் சுவர்களும் உடைந்து காணப்படுகிறது. நாகுடி செல்லும் பிரதான வாய்க்காலில் 6 இரும்பு கதவுகள் அமைத்து தண்ணீரை தேக்கி தேவைக்கு ஏற்ப அனுப்பும் அமைப்பு பாலமும் உள்ளது.

இந்த பாலம் 1935-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பாலத்தில் அடிப்பகுதியில் கான்கிரீட் உடைந்து கம்பிகள் துருபிடித்து உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதனை சீரமைக்காமல் தண்ணீர் திறப்பதால் தண்ணீர் வீணாவதுடன் பாலம் சேதமடையும் நிலையும் உள்ளது. அதனால் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் கல்லணை கால்வாய் தரைத்தளம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருவதால் அந்த பணியோடு பாலம் சீரமைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அந்த தரைத்தளம் அமைக்கும் பணி மேற்பனைக்காடு வர இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.


Next Story