பழுதடைந்த அரசு பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள்


பழுதடைந்த அரசு பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டை, உடைசல் மற்றும் பழுதடைந்து மெதுவாக செல்லும் அரசு பஸ்களால் பரிதவித்து வரும் மக்கள் தனியார் பஸ்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

ஓட்டை, உடைசல் மற்றும் பழுதடைந்து மெதுவாக செல்லும் அரசு பஸ்களால் பரிதவித்து வரும் மக்கள் தனியார் பஸ்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஓட்டை, உடைசல் அரசு பஸ்கள்

தமிழக அரசு துறைகளில் பல்வேறு முக்கிய துறைகள் இயங்கி வருகிறது. இதில் ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் அதிகளவில் தினந்தோறும் பயன்படுத்துவது போக்குவரத்து துறையைதான். அதிலும் குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டமாக இருந்தாலும் சரி, மாநிலம் விட்டு மாநிலமாக இருந்தாலும் சரி பயணத்தை மேற்கொள்ள வேண்டுமானால் போக்குவரத்து துறையைதான் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகையை சிறப்பு வாய்ந்த போக்குவரத்து துறை தமிழகத்தில் நல்ல நிலையில் இயங்குகிறதா என்றால் அதற்கு சரியான பதில் இல்லை என்பதுதான். தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது இயக்கப்பட்டு வரும் பஸ்கள் பெரும்பாலும் பழுதான நிலையிலும், மழைக்காலங்களில் உள்ளே தண்ணீர் ஒழுகும் நிலையிலும்தான் இயங்குகிறது.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கும்பகோணத்திற்குட்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் இயங்கி வருகிறது. குறிப்பாக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. காரைக்குடி-மதுரை இடையே 90 கிலோ மீட்டர் தூரம் பயணத்திற்கு ரெயில்வே போக்குவரத்து இல்லாததால் அதிகளவில் பஸ் போக்குவரத்தைதான் பயன்படுத்துகின்றனர்.

தனியார் பஸ்களில் பயணிக்கும் நிலை

கிராமப்புறங்களுக்கு அரசு டவுண் பஸ்கள் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் தேவகோட்டையில் இருந்து மதுரை நோக்கியும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான கும்பகோணத்திற்குட்பட்ட பச்சை நிற அரசு பஸ்கள் அனைத்தும் வேகம் குறைந்த நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இந்த பஸ்களில் உள்ளே ஆங்காங்கே ஓட்டை, உடைசலாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகும் நிலையில் உள்ளது.

பொதுவாக காரைக்குடியில் இருந்து மதுரைக்கு மற்ற தனியார் பஸ்கள் அதிகபட்சமாக 2 மணிநேரத்திற்குள் சென்றடையும் என்றால் அரசு பஸ்கள் 2.15 மணி முதல் 2.30 மணி வரை செல்லும் நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பயணிகள் அரசு பஸ்களை புறக்கணித்து விட்டு தனியார் பஸ்களில் அதிகளவில் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தை சந்தித்து வரும் வேளையில் பயணிகள் மேலும் இவ்வாறு புறக்கணிப்பது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

தரமான பஸ்கள் வேண்டும்

இதுகுறித்து ராமசாமி (சமூக ஆர்வலர் சூரக்குடி)கூறுகையில்:- ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது அரசு போக்குவரத்தைதான். அந்த போக்குவரத்தை சரியான நிலையில் வைப்பது அரசின் கடமை. போக்குவரத்து என்பது உயிர் சம்பந்தப்பட்டது. ஒரு பயணி பயணத்தை மேற்கொள்ளும்போது அந்த பஸ்சை நம்பிதான் செல்ல வேண்டும். அப்படி இருக்கும்போது அந்த பஸ் சரியான நிலையில் இல்லை என்றால் எவ்வாறு அதில் பயணம் செய்வது. தற்போது காரைக்குடி பகுதியில் இயங்கி வரும் பெரும்பாலான அரசு பஸ்கள் நல்ல நிலையில் இல்லை.

வெள்ளையம்மாள் (கீழடி):- ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வது அரசு பஸ்களில் மட்டும். அப்படி இருக்கும் போது சரியான நிலையில் உள்ள பஸ்களை மட்டும் இயக்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் அதிகளவில் மாணவ-மாணவிகள் அரசு பஸ்களை நம்பி சென்று வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தரமான பஸ்களை இயக்க வேண்டும்.

சரிசெய்யப்படுமா?

வி.ஆர்.பாண்டி (சிவகங்கை):- சிவகங்கை நகரில் 34 நகர்ப்புற பஸ்கள் இயங்கி வருகின்றன. அனைத்து பஸ்களுமே மிக பழமையானவை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித புது பஸ்களும் இந்த பகுதியில் இயக்கப்படவில்லை. இவைகள் எப்போது எந்த இடத்தில் நிற்கும் என்றே தெரியாது அந்த அளவுக்கு மிக பழைய பஸ்கள். மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் புத்தம் புதிய நகர்ப்புற பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சிவகங்கை பகுதியில் மட்டும் ஏற்கனவே ஓடிய புறநகர் பஸ்களில் பழைய பஸ்களை நகர்ப்புற பஸ்களாக மாற்றி ஓட்டுகின்றனர். எனவே சிவகங்கை பகுதியில் புதிய நகர்ப்புற பஸ்களை இயக்க வேண்டும்.

நாட்டரசன்(சிவகங்கை):- சிவகங்கை பகுதியில் இயங்கும் நகர்ப்புற பஸ்கள் பெரும்பாலும் மிக பழுதடைந்தவை. மழை பெய்தால் தண்ணீர் பஸ்களுக்குள் வரும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் அவைகளை சரி செய்ய வேண்டும். மேலும் பல பஸ்களில் படிக்கட்டுகள் மிக பழுதடைந்து உள்ளது. இருக்கைகளும் சரிவர இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் சில பஸ்களில் விளக்குகள் எரிவதில்லை. எனவே இவைகளை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story